முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்படைக்கப்பட்ட மழைக் காடுகள்

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலகிலேயே மிகவும் பழமையான வெப்பமண்டல மழைக்காடுகளான டெய்ன்ட்ரீ மழைக்காடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதிக்குடிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் ஆதிக்குடி சமூகத்துக்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் கீழ் இந்த காடுகள் ஒப்படைக்கப்படுகின்றன.

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மழைக் காடுகள் சுமார் 18 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஆதிக்குடிகள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர். தற்போதைய ஒப்பந்தத்தின்படி குயின்ஸ்லாந்து மாகாண அரசு மற்றும் ஈஸ்டர்ன் குக்கு யலாஞ்சி ஆதிக்குடி மக்கள் ஆகியோர் இந்த மழைக்காடுகளை ஒன்றாக நிர்வகிப்பார்கள். கிரேட் பேரியர் ரீஃப் பவளத்திட்டை ஒட்டி இந்த மழைக் காடுகள் அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் இந்த மழைக் காடுகளும் ஒன்று.

முத்தம் கொடுக்க தடை நீக்கம்

பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவியதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் கலாசாரத்தை பொதுமக்களால் தொடர முடியவில்லை.

பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டது. மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். எனவே பிரான்ஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புதிய மின்சாரக் கார் அறிமுகம்

பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை நேற்று அறிமுகம் செய்தது. அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார். 100 கி.வாட் பேட்டரி கொண்ட இந்த மின்சாரக் காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500  கி.மீ தூரம் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் கூறி உள்ளது.

மின்சார காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கெனவே ரோல்ஸ் ராய்ஸ், அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மக்கள்தொகை சரிவு

சிங்கப்பூர் மக்கள்தொகை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. கொரோனா காரணமாக சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.

அதில், “சிங்கப்பூரின் மக்கள்தொகை 1970-ம் ஆண்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை கடந்த ஆண்டை விட 4.1 % குறைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்துள்ளது. மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைந்தும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவில் பாலியல் வன்கொடுமை

காங்கோ நாட்டில் பணியாற்றிய உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எபோலோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் காங்கோ நாட்டில் பணியமர்த்தப்பட்டனர்.

 

அந்த ஊழியர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 29 பேர் கர்ப்பமான நிலையில், பலர் கரு கலைப்புச் செய்துள்ளனர். இச்செயலால் உள்ளம் உடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து