முக்கிய செய்திகள்

4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை: கொலம்பியா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன் சந்திப்பு

Venkaiah-Naidu 2021 10 01

Source: provided

புதுடெல்லி : 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள கொலம்பியாவின் துணை ஜனாதிபதி மார்த்தா லூசியா நேற்று டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் துணை ஜனாதிபதியும், வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்த்தா லூசியா ராமிரெஸ், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்த அவரை, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றனர்.

தனது இந்திய வருகை குறித்து டுவிட்டரில் பதிவிட்ட மார்த்தா, “கொலம்பியாவில் தடுப்பூசிகளை தயாரிக்க வழிவகை செய்யும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நாங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார். அவர் தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது, இந்தியா-கொலம்பியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், தடுப்பூசி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, கொலம்பியாவின் துணை ஜனாதிபதி மார்த்தா லூசியா சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து