முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத் திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும், இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள்.

இப்படிப்பட்ட இன்றியமையயப் பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்ததால் தான் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் எப்பொழுதெல்லாம் அகவிலைப்படியை அறிவிக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அளித்த அரசு அதிமுக அரசு தான்.

இந்தச் சூழ்நிலையில், தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் மேலும் 3% அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது. அதாவது, 1 முதல் 31% அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறப் போகிறார்கள். ஆனால், மாநில அரசு ஊழியர்கள் 17% அகவிலைப்படியைத் தான் பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம் 14 விழுக்காடு. இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு, ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தலுக்கு முன், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலுக்குப் பின் விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியை நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. எனவே, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளிப் பரிசாக உடனே வழங்க தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து