முக்கிய செய்திகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு நாகநாதசுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகம்

Naganathasamy 2021 10 24

Source: provided

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிஜாம்பிகை, பிறையணி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார். ராகுதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின் போது ராகுபகவானின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது. இக்கோவிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 5 கோடி ரூபாய் செலவில், 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்கள் திருப்பணிகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 18-ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகளுக்காக, 22,500 சதுரஅடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டது.

இதில் 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதூவார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினர். பின்னர் காலை ஆறுகால பூஜைகள் முடிந்து,7 மணிக்கு 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் டி.எஸ்.பி. வெற்றிவேந்தன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண மகோற்சவமும், பஞ்சமூர்த்திகள் தீபாராதனையும் நடந்தது. ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம். கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும். ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து