முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : தலைமை ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு மாநகராட்சி பள்ளி சமையல்கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் ஒரு தலைமையாசிரியர் முயற்சியால் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு தலைமை ஆசிரியர் மாலா அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடத்தை அழகுப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கினார். இதையடுத்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு ஆர்.ஓ தண்ணீர் பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்க தலைமை ஆசிரியர் மாலா நடவடிக்கை எடுத்தார். மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் நீரால் கழுவியும், சமைக்கும் சமையலர்கள் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அறிய ஆசிரியர் குழு ஒன்றை நியமித்தார் தலைமை ஆசிரியர். மேலும் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு நாள் சமையலுக்கு பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள் வெந்நீரில் சுத்தம் செய்து தரப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வெந்நீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார். மேலும் இவை அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய 2 சிசிடிவி கேமராவை சமையல் கூடத்தில் பொருத்தி தனது அறையிலிருந்து தலைமை ஆசிரியர் கண்காணித்து வருகிறார். மாணவிகளின் பெற்றோர்களும் எந்த நேரமும் சமையல் அறையை சென்று பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.

தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து