முக்கிய செய்திகள்

பொது விநியோக திட்டத்தை மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      அரசியல்
OPS 2021 07 12

Source: provided

சென்னை : பொது விநியோக திட்டத்தை மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயவிலை கடைகள் மூலம் பொருட்களை வழங்கி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.  இது தவிர சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களும் மானிய விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. 

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம். அதே சமயத்தில் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டம்.  இதன்படி, முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ஒரு நபருக்கு, ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்ற விதத்தில் ஐந்து கிலோ அரிசி பெறத்தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்த சட்டத்தின்படி மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை ஊரக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிற்கு அரிசியை மத்திய அரசு வழங்குகிறது.  இந்த அரிசி போதுமானதாக இல்லை என்பதால், தமிழக  அரசு வெளிச்சந்தையிலிருந்து தனது சொந்த நிதி மூலமாக அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. 

இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளை குறைக்கும் பொருட்டு, வருமான வரி விவரங்களை தமிழ்நாடு அரசின் உணவுத்துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது.  ‘ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்’ என்ற திட்டத்தை எதிர்த்தவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், தற்போதைய முதல்வர். அவ்வாறு எதிர்த்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதுதான்.

ஏனெனில் பிற மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் முன்னுரிமை பெற்றவர்கள் மட்டுமே பயனடைய முடியும். ஆனால் தற்போது அரசின் உணவுத்துறை எடுக்கும் நடவடிக்கையை பார்த்தால், ஒரு வேளை தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் என்ற நோக்கத்தில் இருந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து ரே‌ஷன் பொருட்களை விட்டுத்தர முன்வந்தால் அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனவே முதல்வர்  இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து