முக்கிய செய்திகள்

ஐ.பி.எல் 2022-ல் தக்கவைக்கப்பட்ட ஒரே தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      விளையாட்டு
Varun--2021-12-01

ஐ.பி.எல் கிரிக்கெட் 2022 சீசனில் தக்கவைக்கப்பட்ட ஒரே தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. அவரை கொல்கத்தா ரூ.8 கோடிக்கு தக்கவைத்துள்ளது.

தமிழக வீரர்கள்...

ஐ.பி.எல் போட்டியில் எதிர்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் வெளியானது. ஐ.பி.எல் 2021 போட்டியில் ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த் (சி.எஸ்.கே), தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா), ஆர். அஸ்வின், எம். சித்தார்த் (தில்லி) விஜய் சங்கர், நடராஜன் (ஹைதராபாத்) வாஷிங்டன் சுந்தர் (ஆர்சிபி),  எம். அஸ்வின், ஷாருக் கான் (பஞ்சாப்)  என 12 தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். 

ஒரே ஒரு வீரர்...

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிக்கான மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் அணிகள் நேற்று முன்தினம் வெளியிட்டன. இதில் ஒரே ஒரு தமிழக வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்துள்ளது கொல்கத்தா அணி. இதர தமிழக வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை. 

அஸ்வின் தேர்வு...

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள ஆர். அஸ்வினை டெல்லி அணியால் தக்கவைக்க முடியாமல் போனது. இதனால் இரு புதிய ஐ.பி.எல் அணிகளில் ஏதாவது ஒன்று அஸ்வினைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு சையத் முஷ்டாக் அலி கோப்பையைப் பெற்றுத் தந்த ஷாருக் கானையும் இரு புதிய அணிகள் தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் எனக் கருதப்படுகிறது. சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி வென்று சாம்பியன் ஆகியுள்ளதால் மெகா ஏலத்தில் ஆர். அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷாருக் கான், சாய் கிஷோர், நடராஜன், எம். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் பெரிய தொகைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து