முக்கிய செய்திகள்

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டும் : இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      இந்தியா
Vaccine---2021-10-28

Source: provided

புதுடெல்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் நிலையில், இந்திய மரபணு விஞ்ஞானிகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புடைய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அளித்து கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

கொரோனா வைரஸின் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்க மத்திய அரசு தேசிய பரிசோதனை ஆய்வகங்களின் குழுவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு இந்திய சார்ஸ்-கோவ்-2 மரபணு வரிசைமுறை கூட்டமைப்பு (INSACOG) என்று பெயர். அவர்கள் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் பூஸ்டர் தடுப்பூசியை பரிந்துரை செய்துள்ளனர். முன்னதாக தொற்றுநோய் நிலைமை குறித்து மக்களவையில் நடந்த விவாதத்தின் போது எம்.பி.,க்கள் பூஸ்டர் தடுப்பூசி தேவை என கோரியிருந்தனர்.

இது தொடர்பாக அரசு ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:-

தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த, புதிய வகை வைரஸை முன்கூட்டியே கண்டறிவதற்கு மரபணு கண்காணிப்பு முக்கியமானதாக இருக்கும். வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள், அங்கிருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடாமல் ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

மேலும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து பரிசீலிக்கலாம். தற்போதைய தடுப்பூசிகளில் வைரஸ் உடன் போராடும் ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் இருக்கும். அவை ஒமைக்ரானின் ஆபத்தை குறைத்தாலும், அவற்றை எதிர்க்க போதுமானதாக இருக்காது. எனவே வைரஸ் தொற்றினால் பாதிப்பை சந்திக்கக் கூடிய 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியை பரிசீலிக்கலாம் என கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து