முக்கிய செய்திகள்

மின்னகம் இணையதள ஒப்பந்தம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      அரசியல்
OPS 2021 07 12

Source: provided

சென்னை : மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத்தில் வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார் . 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மின் நுகர்வோர்களிடமிருந்து வரும் புகார்களைப் பெற்று அவற்றை உடனுக்குடன் களையும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையம், தற்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும் வெளிப்படையான ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வந்தன. இந்த மையங்களில் புகார் தெரிவிக்க விரும்பும் மின் பயனீட்டாளர்கள் 1912 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். இதுதவிர, மின்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு, தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளி விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வந்த மின் தடை புகார் மையங்களை ரத்து செய்து விட்டு, அனைத்து புகார்களையும் ஒருங்கே பெறும் வண்ணம் மின்னகம் என்ற ஒரு தனித் தளத்தை அமைத்துள்ளதாகவும், பராமரிப்புப் பணிகள் மற்றும் இதர சேவைகள் தாமதப்பட்டுப் பொதுமக்களுக்கு மின்சார வாரியத்தின் மீது அதிருப்தி நிலவுவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்த விவரங்களை வெளிப்படையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத்தில் வெளியிடவும், ஏற்கெனவே பணிபுரிந்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை வழங்கவும், மின்னகம் தொடர்பாக மின்சார ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடையே நிலவும் அதிருப்தியைக் களையவும், மூன்று கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்களின் தரவுகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து