முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: சம்பவ இடத்தில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆய்வு

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நீலகிரி : குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துகுள்ளான இடத்தில் விமானப்படை தளபதி ஆர்.வி.சவுத்ரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் இறக்கை உள்பட பாகங்கள் அனைத்தும் தீயில் எரிந்தது. ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் பறந்து வந்த போது விபத்து ஏற்பட்டது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கு தளத்தை அடைய எவ்வளவு தூரம் இருந்தது போன்ற முக்கிய தகவல் அடங்கிய கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

நேற்று காலை இந்திய விமானப்படை தளபதி ஆர்.வி.சவுத்ரி ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து முக்கிய பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழ்நாடு தடயவியல் துறை இயக்குனர் சீனிவாசன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வந்த குழுவினர் தடயங்களை சேகரித்தனர். இந்த பணியில் விமானப்படை ஊழியர்கள், தடவியல் நிபுணர்கள் ஆகியோர் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் உதவியோடு தடயங்களை சேகரித்தனர்.

இதற்காக சில பாகங்களை வெட்டி எடுக்க எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் ரசாயனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இரவு முழுவதும் அதிக வெளிச்சம் தரக்கூடிய லைட் கட்டி கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்தது. காலையிலும் பணி தொடர்ந்தது. காலை 10 மணி அளவில் கருப்பு பெட்டியை கண்டுபிடித்து விமானப்படையினர் எடுத்துச் சென்றனர்.

அதிநவீன ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி, எந்திர கோளாறு அல்லது கடும் பனிமூட்டம் ஆன மோசமான வானிலை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து