முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தொழில்கள் உருவாக அரசு நிச்சயம் துணை நிற்கும்: இஸ்பாகான் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

புதிய தொழில்கள் உருவாக அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று சென்னையில் நடந்த இஸ்பாகான் அமைப்பின் தொழில் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

சென்னை, பழவந்தாங்கலில் நடைபெற்ற இஸ்பாகான் அமைப்பின்  14-வது மாநாட்டினை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

இந்த இஸ்பாகான் 2022 ஆண்டு விழா, இந்த ஆண்டு சென்னையில் நடப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.   தமிழகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மை அடைந்த ஒரு மாநிலம். தமிழ்நாட்டில் அறிவு சக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அத்தகைய இளைய அறிவு சக்தியை உருவாக்கக் கூடிய அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்குதான் அதிகம்.

இந்தியாவில் இருக்கும் மிகமுக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தை  சார்ந்தவை என்று அண்மைக்கால புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.  தமிழ்நாடு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவின் அடிப்படைகளில் தேவையான தகுதிகளுடன் முன்னிலையில் உள்ள மாநிலம். 

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயர்த்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். 

தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் காப்பகங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்தவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தொழில் பூங்காக்களையும் உருவாக்குதற்குமான செயல்திட்டங்கள் வகுக்கப்படடுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டுமே ஏறத்தாழ 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 60 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  உயர் வருவாய் உள்ள தனிநபர் முதலீட்டாளர்கள் சென்னையில் மட்டுமல்லாது, மாநிலத்தின் இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களிலும் தன்னார்வ அமைப்பாக உருவாகி சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறோம்.

வரும் நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாக உருவெடுக்கும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். 

உலகெங்கும் நான்காம் தொழிற்புரட்சி தொடங்கிவிட்டது. தானியங்கி வாகனங்கள், தொலைவழி மருத்துவம்,  முப்பரிமாண அச்சு,  மரபணுப் புரட்சி,    மெய்நிகர் நுட்பங்கள் என தொழில்நுட்பவியல் விரிந்து பரவி விட்டது. பெருந்தொற்றுச் சூழலில், தொழில் நிறுவனங்கள் இயங்கும் முறையே மாறிப்போயிருக்கிறது. இத்தகைய புதிய சூழலில் இயங்க உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  பெரிய நிறுவனங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சிறு,குறு, நடுத்தரத் தொழில்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம். புதிய புத்தாக்கத் தொழில்களில் இறங்கிப் பார்க்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டதாக இந்த அரசு இருக்கிறது. 

புதுயுக சிந்தனைகளுடன் சுதந்தரமாக இயங்கும் புத்தொழில்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

நமக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கித் தந்த காலம் முடிந்துவிட்டது.   வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருக்கும் பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. பல களங்களில் நமது இளைஞர்கள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொழில்நுட்பங்கள் மூலமாக உருவாக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தச் சாதனையோடு நாம் அமைதியாகிவிடக் கூடாது. அடுத்த சாதனைக்குத் தயாராக வேண்டும். 

 புதிய தொழில் திறனாளர்கள் உருவாக வேண்டும். புதிய தொழில் முனைவோர் உருவாகி அவர்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றாக  வேண்டும்.  இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலிருந்தும் வரவேண்டும். வளர்ச்சிக்கு அடையாளமான, அதே வளர்ச்சிக்கு அடிப்படையான முதன்மை முதலீடு மனிதவள முதலீடே. தொழில்முனைவோர்களும் தொழில்திறனாளர்களுமே இந்தச் சூழலை உருவாக்குகிறார்கள். எண்ணங்களே ஏற்றத்தை உருவாக்குகின்றன, மனிதர்களே மாற்றத்தை உருவாக்குகிறார்கள். புதிய நூற்றாண்டின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், புத்தாக்கத்தின் வழியாக புதிய தொழில்கள் உருவாக்கவும், இந்த அரசு நிச்சயமாக துணைநிற்கும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து