முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளியின் இறப்புடன் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புடன் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் தாக்கப்படும் காட்சிகள், காவல் நிலையத்திலேயே சர்வ சாதரணமாக அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்கள், சமூக, செய்தி ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேநேரம், குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரை பிடிக்கும் ஒரு சில காவலர்கள், அவர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு காரணம் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம்தான். 

அரசியல் அழுத்தம், பொது வெளியில் ஒரு சில காவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலைமை, உயர் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாக முடிவு காணுங்கள் என்று தனக்குக் கீழ் உள்ள காவலர்களுக்கு அழுத்தம் தருதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் காவலர்கள், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தங்களது வெறுப்பைக் காட்டும் நிலைமை ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

8.1.2022 அன்று சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனை, வழக்கு சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலையக் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், பிறகு 11-ஆம் தேதி அவரை கைது செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்ததாகவும், 12-ஆம் தேதி காலை மாற்றுத் திறனாளி பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அன்றே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த அரசின் தவறினால் தனது இன்னுயிரை இழந்த திருத்தணி குப்புசாமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன். மேலும்  தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து