முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில்  தமிழக அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இடம்பெற வேண்டி, தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம்.

நான்காவது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமுமின்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். மத்திய  பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழகத்தின்  அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து  கொள்வதற்கான  அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும்  தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். 

மேலும், சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து