முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் உரித்தாகட்டும்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஆதிக்க இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்க போராட்டக் களங்களில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ம் தேதி அ.தி.மு.க. நடத்தி வருகிறது. இந்திய துணை கண்டத்தில் ஒரு பொது மொழி தேவை என்பது ஏற்புடையதல்ல என்பது அண்ணாவின் கருத்து. 1956-மாநிலங்கள் புனரமைப்பு சட்டம் மூலம் மொழி அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்தந்த மாநில ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மொழிகளுக்கே உரிமையுண்டு என அரசமைப்பு சட்டத்தில் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை இந்தி புகுத்தப்பட மாட்டாது என்ற அன்றைய பிரதமர் நேருவின் உறுதிமொழி சட்ட வடிவமாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. 

சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கியது. பெரியார் தலைமையில் தொடர் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்ததையடுத்து  1940-ல் அரசாணை திரும்ப பெறப்பட்டது.  இதில் 1600 பேருக்கு மேல் கைதாகினர். அதில் தாளமுத்து, நடராஜன் ஆகிய இருவரும் சிறை கொடுமைக்கு ஆளாகி பலியானார்கள். 1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆட்சி மொழி என்ற சட்டப்பிரிவில் திருத்தம் கோரி பெரும் போராகவே நடைபெற்றது. உலக வரலாற்றில் தமிழ் மொழி காக்க தீக்குளித்தும், நஞ்சு அருந்தியும், காவல் துறை மற்றும் ராணுவத்தினரின் குண்டுகளுக்கு ஆளாகியும் பல நூறு பேர் மாண்டனர். மொத்தம் 50 நாட்கள் நடந்த அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மத்திய அரசு உறுதிமொழி அளித்து பின் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக மத்திய அரசால் பயன்படுத்தப்படும் என்ற சட்ட திருத்தம் நிறைவேறியது. 

ஆதிக்க இந்தி எதிர்ப்பு போராட்டங்களை முன்னிட்டு சிறையில் மாண்ட நடராஜன், தாளமுத்து, தீக்குளித்து மாண்ட கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நமது வீரவணக்கம் உரித்தாகட்டும். மத்திய அரசு கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். மாநில அரசின் எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் அலுவல் மொழியாக மாநில மொழி இருக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளுக்கும் சம மதிப்பு அளிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாக திணிக்கப்படுவதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். இந்தி உள்ளிட்ட எந்தவொரு மொழி தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதனை தமிழ் மக்கள் என்றென்றும் எதிர்ப்பார்கள். 

எஸ். முத்துமணி

முன்னாள் எம்.பி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து