முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ல் ஏழு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
Jitendra-Singh 2022 03 31

இந்த ஆண்டில் இஸ்ரோ 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அமைச்சர், பிஎஸ்எல்வி –சி-52 செலுத்து வாகனம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-4-ஐ 2022 பிப்ரவரி 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் செயல்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நானோ செயற்கைக் கோள்களில் முதலாவதான ஐஎன்எஸ் – 2டிடி-யும் இதனுடன் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிலில் இந்த ஆண்டில் இஸ்ரோ 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் என்று தெரிவித்துள்ள அவர், 'விண்வெளித்துறையின் பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம்(என்எஸ்ஐஎல்) கடந்த 3 ஆண்டுகளில் பல தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்கை கோள்களை விண்ணில் ஏவியதன் மூலம் சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது. என்எஸ்ஐஎல் நிறுவனம் ஏற்கனவே, 45 சர்வதேச செயற்கை கோள்களை, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவியுள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள் வாடிக்கையாளர்களுக்காக, 4 பிரத்தியேக விண்ணில் ஏவும் சேவை ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.

உலகளவில் அதிகரித்து வரும் பிராட்பாண்ட் தகவல் தொடர்பு சேவைகள் காரணமாக, என்எஸ்ஐஎல் நிறுவனம் பல வெளிநாட்டு செயற்கை கோள்களை இஸ்ரோ ராக்கெட்டுகள் மூலம் அனுப்புகிறது. விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதற்காக சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்து அதற்காக இன்-ஸ்பேஸ் என்ற தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது. இது விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி ஊக்குவிக்கும். விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 48 விண்ணப்பங்களை இன்-ஸ்பேஸ் நிறுவனம் பெற்றது. இவை பரிசீலக்கப்பட்டு வருகின்றன,'என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!