முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஃப்லிம்பிக்ஸ் போட்டி: இந்தியாவுக்கு இரு தங்கம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      விளையாட்டு
India-2-Gold 2022 05 06

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல், பாட்மின்டனில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 247.5 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தென் கொரியாவின் கிம் வூ ரிம் (246.6), மற்றொரு இந்தியரான சௌரியா சைனி (224.3) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனர். ஸ்ரீகாந்த் எட்டியிருக்கும் புள்ளி, இறுதிச்சுற்றில் உலக சாதனையாகும்.

அதேபோல், பாட்மின்டன் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றிலும் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. போட்டியின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை நிறைவில், இந்தியா 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 65 பேர் கொண்ட இந்திய அணி கலந்துகொண்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு இப்போட்டியில் இந்தியா தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலம் மட்டும் வென்றிருந்தது.

சீனாவில் கொரோனா பரவலால் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது. மேலும், புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பவர்பிளேயை என்னால் நன்றாக பயன்படுத்த முடியும்: விருத்திமான்

குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா சமீபத்தில் தன்னுடைய 20 ஓவர் போட்டி ஆட்டமுறை குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " நான் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கான வீரர் அல்ல என்று சிலர் ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே  எப்போதும் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பினேன்.

மகேந்திர சிங் டோனி, ஆண்ட்ரே ரசல் அல்லது கிறிஸ் கெய்ல் போன்றவர்களின் உடலமைப்பு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் உள்ள ஆற்றல், எனது அணுகுமுறையுடன் பவர்பிளேயை என்னால் நன்றாக பயன்படுத்த முடியும். அதை தான் நான் செய்து வருகிறேன். " என சாஹா தெரிவித்தார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் - பெல்ஜியத்தின் டேவிட் கோபின் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3,5-7,7-6 (11,9) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று மாட்ரிட் ஓபன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் . 

இங்கிலாந்து அணிக்கு விரைவில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

இங்கிலாந்தின் அணியின் நிர்வாக இயக்குநராக ராப் கீ பொறுப்பேற்ற பின்னர் நியூசிலாந்து முன்னாள் வீரரும் தற்போதைய கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான மெக்குல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார்கள். 

மெக்கல்லம் மற்றும் கேரி கிறிஸ்டன் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களாக இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று ராபர்ட் கீ விருப்பப்படுவதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களாக  டெஸ்டில் இறங்குமுகமாக இருக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது. வெள்ளைப் பந்து (ஒருநாள் & டி 20) மற்றும் சிவப்புப் பந்து (டெஸ்ட்) அணிகளுக்கு தனித்தனிப் பயிற்சியாளர்களை இங்கிலாந்து நியமிப்பது இதுவே முதல்முறையாக இருக்கப்போகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் சைமன் கடிச், இங்கிலாந்தின் கோலிங்வுட், நிக் நைட் ஆகியோரும் பயிற்சியாளர்களுக்கான பரிசீலனையில் உள்ளார்கள். 

டி - 20 பிளாஸ்ட் போட்டியில் இங்கி. வீரர் ஆர்ச்சர் பங்கேற்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்புவது பற்றி டெய்லி மெயில் ஊடகத்திடம் ஆர்ச்சர் தெரிவித்ததாவது:

பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதால் மீண்டும் விளையாட வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியுமா என்றும் சந்தேகப்பட்டேன். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு உறுதியையும் மனநிம்மதியையும் அளித்தது. நான் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றார்கள்.  இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தத்தை இழந்து விடுவேன் என எண்ணினேன். இப்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன். டி20 பிளாஸ்ட் போட்டியில் நான் விளையாட வேண்டும். அதில் நான் ஒழுங்காக விளையாடா விட்டால் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. டி20 உலகக் கோப்பை வரப்போகிறது எனத் தெரியும். அதில் கலந்துகொண்டு நன்றாக விளையாட வேண்டும் என்றார். மே 26 அன்று டி20 பிளாஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெகுலா..!

போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருக்கும் பெகுலா காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் உள்நாட்டு வீராங்கனை சாரா சொரைப்ஸ் டோர்மோவை தோற்கடித்தார். 8-ஆம் இடத்திலிருக்கும் ஜாபியுரும் 6-3, 6-2 என ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை எளிதாக வீழ்த்தினார்.

 

அரையிறுதியில் பெகுலா, ஜாபியுர் முறையே சுவிட்ஸர்லாந்தின் ஜில் டெய்ச்மான், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோரை எதிர்கொள்கின்றனர். முன்னதாக டெய்ச்மான் - உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவையும், அலெக்ஸாண்ட்ரோவா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவையும் காலிறுதியில் வெளியேற்றியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து