முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா கடற்கரை மணலுக்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை? - நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : சென்னை மெரினா கடற்கரை மணலுக்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் சாராய பாட்டில்கள் உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, இரவு நேரத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் வந்த நிலையில்,  காவல் துறையினர் நடத்திய விசாரணையில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  

மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சாராய பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமானவையா அல்லது கள்ளச்சாராயம் காய்ச்சி பாட்டில்களில் நிரப்பி தனியாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் மடைமாற்றி விடப்படுகிறதா என்பதையும் காவல் துறையினர் தீர விசாரித்து, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் ஆகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. 

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தமிழகத்தில் எங்கெங்கு நடைபெறுகின்றன என்பதை கண்டறிந்து, இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து