முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.வி. சண்முகத்தின் கருத்து சட்டத்திற்கு உட்பட்டது இல்லை துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      தமிழகம்
Vaithilingam-2022-06-24

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து சட்டத்திற்கு உட்பட்டது இல்லை என்று வைத்திலிங்கம் தெரிவித்தார். 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, அரியலூர் புறவழிச்சாலையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் கூறியதாவது:-

சி.வி.சண்முகம் சொன்ன கருத்து சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. பொதுக்குழுவைக் கூட்ட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. நீதிமன்றத்திலேயே , பொதுக்குழுவை நடத்தலாம் என்று கூறி விட்டோம். 23 தீர்மானங்களை மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து விட்டனர்.  

அப்படியிருக்கும்போது, இவர்கள் எப்படி பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றலாம். அவைத் தலைவர் தேர்வு தீர்மானத்தை எப்படி கொண்டு வரலாம். எனவேதான், நான் அவைத் தலைவர் தேர்வு செல்லாது என்று கூறுகிறேன். ஒருவேளை, அவைத் தலைவர் தேர்தல் நடத்துவதாக இருந்தால், வேட்புமனு யாரிடமிருந்தாவது பெற்றார்களா ? போட்டியிட யாரேனும் விரும்புகிறீர்களா என கேட்டார்களா ? இப்படி எதையுமே செய்யாமல், அவைத் தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம்.

பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுமே ரத்தாகும் போது, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் ரத்தாகிறது. பிறகு எப்படி அவைத்தலைவர் பதவியை கொண்டு வரமுடியும். 

ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியும் என்பது உண்மைதான். கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் நடத்த முடியும். ஏனென்றால், அவைத்தலைவர் பதவி செல்லாது. கட்சியின் பழைய விதியின்படி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்றால், பொருளாளருக்குத்தான் அதற்கான அதிகாரம் உள்ளது. 

அப்படியென்றாலும் ஓ.பன்னீர்செல்வம்தான் கூட்டத்தை நடத்துவார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவோம். எங்கள் தரப்பினரின் நம்பிக்கை கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் எண்ணப்படி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும், ஒற்றுமை வர வேண்டும், கூட்டு தலைமை வேண்டும். இதுதான் எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து