முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை செய்ய கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
Madurai-High-Court 2021 12

Source: provided

மதுரை : கோவில் கும்பாபிஷேக விழாவில்  இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை தடை செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 120 கோடி மக்களில் கோவிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தினை கேட்கும் போது பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழாவின் போது இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் கோயில்களின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தை சேர்ந்தவர் தான். இருப்பினும் அவர் ஏராளமான இந்து கடவுள் பாடல்கள் பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து