முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை : இன்று முதல் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Chennai-London 2022 07-31

Source: provided

சென்னை : 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை - லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால் இந்த விமானத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

சென்னையில் இருந்து லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்துக்கு செல்லும் இந்த விமானம் பாரிஸ், ரோம், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக செயல்பட்டு வருகிறது. எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. 

பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் இன்று (திங்கட்கிழமை) முதல் வாரத்தில் 7 நாட்களும் விமான சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து அதிகாலை 5.31 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விமானத்தின் பயண நேரம் சுமாா் 13 மணி நேரம் ஆகும். இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து லண்டனுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுவதால் சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து