முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM 2022 08 11

போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போதைப் பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை மருந்துகளின் பயன்பாடும் அதற்கு அடிமையாகிறவர்கள் தொகையும், அதிகமாகி வருவதை நினைக்கும் போது, எனக்கு கவலையும் வருத்தமும் அதிகமாகிறது. இதனை தடுக்க வேண்டுமானால் போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது. அதனை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வது.  போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதும் ஆகும். பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் அத்தகைய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும்.

போதை மருந்து விற்பனை செய்யக்கூடிய குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களை தனிப்பட்ட குற்றவாளிகளாகக் கருத முடியாது. சமூகத்தில் தீராத பெரும் நோயைப் பரப்பக்கூடிய குற்றவாளிகளாக அவர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. எந்தக் குற்றமாக இருந்தாலும், அதில் சட்டத்தின் பங்கு பாதிதான். குற்றவாளிகளின் மனமாற்றமானது பாதியளவு இருக்க வேண்டும். 

பெரும்பாலும் தனக்கு வந்த பிரச்னையில் இருந்து மீள்வதற்காக போதையை பலரும் நாடுகிறார்கள். போதைக்குக் காரணங்களைத் தேடாதீர்கள்.  பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுங்கள். அதனுடைய முடிவில் வெற்றி காத்திருக்கும்.  வெற்றியை நீங்கள் சுவைக்கத் தொடங்கிவிட்டால், அதுவே உங்களைப் பல உயரங்களுக்கு இட்டுச் செல்லும். 

போதை மருந்தின் தீமைகளை பட்டியலிடுங்கள் என்று மருத்துவர்கள் சென்று சிலரிடம் கேட்டபோது பீதியே ஏற்பட்டது. முதலில் மூளையின் செயல்பாடு குறைகிறது. மந்தம் ஏற்படுகிறது. செல்ப் கண்ட்ரோல் குறைகிறது. தனியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஏற்படும். இயல்பான பழக்க வழக்கம் மாறுகிறது. மனநிலை பாதிக்கப்படுகிறது. கோபம் அதிகம் ஆகிறது. இதயம் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் பாதிக்கப்படுகிறது. கேன்சர் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டு மொத்தமாக படுக்க வைத்து விடுகிறது. இதுதான் போதையினுடைய பயணம். 

போதையின் இத்தகைய கொடுமையான தன்மையை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.  விலைமதிப்பு இல்லாத மனித உயிர்களை இப்படி ஒட்டுமொத்தமாக சிதைத்துக் கொள்ளக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.  போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதனின் பிரச்னை அல்ல.  சமூகப்பிரச்னை. 

போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோளாக இருக்கிறது.  போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தல் என்பதை இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும்.  இது மக்கள் இயக்கமாகச் செயல்பட வேண்டும். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது. பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவச் சமுதாயத்தை வளர்த்தால், போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள்.

சட்டத்தின் காவலர்களாக போதைப் பொருள்களைத் தடுக்க மாவட்ட கலெக்டர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இருப்பதைப் போல, விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த இரண்டு கைகளும் சேர்ந்தால்தான், போதையின் பாதையை நாம் தடுக்க முடியும். 

போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை தடுத்தாக வேண்டும். பரவுவதை தடுத்தாக வேண்டும். விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டாக வேண்டும். போதையின் பாதையை அடைப்பதும் எளிதுதான். போதையில் இருப்பவரை மீட்பதும் எளிதுதான். அதனை அவர்களுக்கு சொல்லவேண்டிய முறையில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து