முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு: கேரளா முழு கடையடைப்பில் அரசு பஸ், வாகனங்கள் சேதம் : பி.எப்.ஐ. அமைப்பினர் போராட்டத்தால் இயல்புநிலை பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      இந்தியா
Kerala 2022--09-23

Source: provided

திருவனந்தபுரம் : நாடு முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனைகளுக்கும், அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பு நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தியது. "அதிகாலை முதல் அந்தி வரை" என்று அறிவிக்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கியது. இந்த போராட்டத்தால் அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டது. 

தீவிரவாதிகளுடன் தொடர்பு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், அதன் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை, கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் 12 மணிநேர ஹர்தால் (கடையடைப்பு) போராட்டத்திற்கு பிஎஃப்ஐ கட்சி வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கடையடைப்பு போராட்டம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.

இந்த பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட காவல்துறைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

கடையடைப்பு போராட்டத்தின் போது, ஆலுவா அருகே கம்பனிபாடி என்ற இடத்தில் மாநில அரசின் கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஒன்று அடித்து சேதப்படுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் பிற வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. கோழிக்கோடு பகுதியில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

இதுகுறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இந்த கடையடைப்பு போராட்டம் தேவையற்றது என்றும், சட்டத்தை மீறுவோர் மீது பினராய் விஜயன் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் கே,. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்

நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 

மேலும் பந்த் போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து