முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் முருகர் திருத்தேர் வெள்ளோட்டம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai-1 2022 11 2

Source: provided

தி.மலை : திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி ரூ.32 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட முருகர் திருத்தேரின் வெள்ளோட்டம் நேற்று (நவ.26) நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும்.

இந்நிலையில், முருகர் திருத்தேரின் மேற்பகுதி பழுதடைந்ததால், அதனை புதுப்பிக்கும் பணி சுமார் ரூ.32 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. இப்பணி நிறைவு பெற்றதும், திருத்தேர் வெள்ளோட்டம் கடந்த 20-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதற்கிடையில், முருகர் திருத்தேரை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், திருத்தேர் பலவீனமாக உள்ளது என தெரிவித்து, குறைபாடுகளை சரி செய்த பிறகு, வெள்ளோட்டம் நடத்தலாம் என அறிக்கை அளித்தனர். இதனால், முருகர் திருத்தேரின் வெள்ளோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப்பணி நிறைவு பெற்றதும், மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முருகர் திருத்தேரின் வெள்ளோட்டம் நேற்று (நவ.26) நடைபெற்றது.

ராஜகோபுரம் முன்பு தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். பின்னர், திருத்தேரின் வெள்ளோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 10.40 மணிக்கு புறப்பட்ட முருகர் திருத்தேரின் வெள்ளோட்டம், மாட வீதியில் சுமார் 4 மணி நேரம் வலம் வந்து, நிலைக்கு சென்றடைந்தது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து