முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன. 1 முதல் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ. 1500-ஆக உயர்வு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
CM-2 2022 12 03

அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  குறிப்பாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். சென்னை மெரீனா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். 

முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கி விடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.  ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலை வாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை. இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம். அதற்குச் சான்றாகத்தான் நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது.

வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து