முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல் தாக்கம்: அனைத்து மாவட்டங்களிலும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையம், 5,093 நிவாரண முகாம்கள் தயார் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
KKSSR 2021 12-06

Source: provided

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தை சமாளிக்க  121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்  தென்மேற்கு வங்கக் கடல், தமிழகத்தின் கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரது அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மாண்டஸ் புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர்  கடந்த 8-ம் தேதி அன்று பல்வேறு துறை அலுவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.   தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் அலுவலர்களுடன் இயங்குகின்றன. 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றது. 

மேலும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும் போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.  மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

 மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கான அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

செய்யக் கூடாதவை

நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து