முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி., ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று: சானியா - போபண்ணா ஜோடி நாளை பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      விளையாட்டு
26-Ram-53

Source: provided

மெல்போர்ன்: சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று  நாளை நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்றில் பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது.

இறுதிக்கு முன்னேற்றம்...

தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். 

இங்கிலாந்து ஜோடியை...

அரையிறுதிச் சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, அமெரிக்க, இங்கிலாந்து ஜோடியான டிசிரே - ஸ்குப்ஸ்கியை 7-6(5), 6-7(5), 10-6 எனக் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு வீழ்த்தியது. இதனால் இந்தியர்கள் இருவரும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். 

ஓய்வு அறிவிப்பு...

பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

பிரேசில் ஜோடியை...

இந்நிலையில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று  நாளை (ஜனவரி 28) நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்றில் பிரேசிலைச் சேர்ந்த ஸ்டெஃபானி - ரஃபேல் மாடோஸ் ஜோடியுடன் மோதுகிறது இந்திய ஜோடி. வரும் சனிக்கிழமை இந்திய நேரம் மதியம் 2 மணிக்கு சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லைவ் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து