முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      ஆன்மிகம்
Palani 2023 01 27

Source: provided

திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பழனி முருகன் கோவிலில் முதன் முறையாக பன்னிரு திருமுறை, கந்தர் அனுபூதி, திருப்புகழ் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25-ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 

மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மலைக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

காலை 4.30 மணிக்கு 8-ம் கால வேள்வியுடன் தொடங்கி திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா, மங்கள இசை, முதல்நிலை வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, சந்திரன் வழிபாடு, நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருநிறை வேள்வி, நறும்புகை விளக்கு, படையல், திருஒளி வழிபாடு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம், கட்டியம், கந்தபுராணம், திருஒளி வழிபாடு, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. 

அதன்பின் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. 

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இவை தவிர போலீசார், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மற்ற பக்தர்களுக்கு 16 இடங்களில் அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு சிரமமின்றி கும்பாபிஷேகத்தை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அவர்கள் அடிவாரம், கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. 

அந்த பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பழனி கோவில் வரை இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கண்காணிக்க ஹெலிகேம் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகரில் பிறநகர் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய இடங்களில் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. 

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், இணை ஆணையர் நடராஜன், நீதிபதிகள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து