முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரை சுட்டுக்கொன்றவர் மனநலப்பிரச்சனை உள்ளவராம் : மனைவி தெரிவித்த அதிர்ச்சி தகவல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Gopal-Das 2023 01 30

Source: provided

புவனேஷ்வர் : ஒடிசா அமைச்சர் நபிகிஷோர் தாஸை சுட்டுக் கொன்ற காவல்துறை துணை உதவி ஆய்வாளர்  கோபால் தாஸுக்கு உளவியல்/மனநலப் பிரச்னை இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவருமான நபகிஷோர் தாஸை, காவல் துறை துணை உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியது.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் பற்றி அறிந்த கோபால் தாஸின் மனைவி, அவருக்கு கடந்த 7 - 8 ஆண்டுகளாக உளவியல் பிரச்னை இருப்பதாகவும், தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். கோபால்தாஸ் மனைவி ஜெயந்தி கூறுகையில், 2019ஆம் ஆண்டு வரை கோபால் தாஸ் தனியார் மருத்துவமனையில் உளவியல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறுகிறார். கொரோனா பேரிடரின்போது மருத்துவமனை மூடப்பட்டதால், அவர்கள் அளித்த மாத்திரைகளை மட்டும் கோபால்தாஸ் சாப்பிட்டு வந்ததாகவும் கூறுகிறார்.

இங்கிருந்து மருந்துகள் வாங்கி அவருக்கு கொடுப்போம் என்றும், கடந்த நான்கு மாதங்களாக அவர் விடுமுறை கேட்டும் அதிகாரிகள் அளிக்காததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் இருந்ததாகவும் அவரது பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகன் மனோஜ் கூறுகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சந்திர சேகர் திரிபாதியும், கோபால் தாஸ், உளவியல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்ததை உறுதி செய்துள்ளார்.

பிரஜ்ராஜ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து துணை மண்டல காவல் அதிகாரி குப்தேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அமைச்சர் நபகிஷோர் தாஸ் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் மக்களைச் சந்திப்பதற்காக காரில் இருந்து கீழே இறங்கியபோது, அமைச்சர் மீது காவல் துறை துணை உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் குண்டு பாய்ந்து, அமைச்சர் படுகாயம் அடைந்தார்.

முதலில், ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் புவனேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே, அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட துணை உதவி ஆய்வாளர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றார் குப்தேஸ்வர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து