முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வாய்ப்புகளை தேடி பயணம்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தமிழக வீரர் முரளி விஜய்..!

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      விளையாட்டு
Murali-Vijay 2023 01 30

Source: provided

சென்னை : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வீரரான முரளி விஜய் அறிவித்துள்ளார்.

பெர்த் டெஸ்டில்...

இந்திய அணிக்காக 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி-20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் முரளி விஜய். டெஸ்டில் 12 சதங்கள், 15 அரை சதங்களுடன் 3982 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2018-ல் பெர்த் டெஸ்டில் விளையாடினார். தமிழ்நாடு அணிக்காகக் கடைசியாக 2019-ம் ஆண்டிலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020-ம் ஆண்டிலும் விளையாடினார். அதன்பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் அவர் பங்கேற்கவில்லை. 

டி-20 லீக் போட்டிகளில்...

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள முரளி விஜய், உலகளவில் புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து இதர நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அவர் பங்கேற்கவுள்ளார். 2013 முதல் 2018 வரை இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக இருந்தார் முரளி விஜய். டிசம்பர் 2013 முதல் ஜனவரி 2015 வரை இந்திய அணி - தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியபோது அதிக பந்துகளை எதிர்கொண்ட, அதிக ரன்கள் எடுத்தவர்களில் 2-வது பேட்டராக இருந்தார் முரளி விஜய். 

முக்கிய வீரராக... 

ஐபிஎல் போட்டியில் 106 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தில்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி 2010, 2011-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றபோது அந்த அணியின் முக்கிய வீரராக இருந்தார். ஆர்சிபி அணிக்கு எதிரான 2011 ஐபிஎல் இறுதிச்சுற்றில் 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார் முரளி விஜய். ஐபிஎல் போட்டியில் 2 சதங்கள், 13 அரை சதங்களுடன் 2619 ரன்கள் எடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து