முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் வாங்குவோருக்காக பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2023-01

Source: provided

சென்னை : தமிழகத்தில் நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பட்ஜெட் 2023-ல் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது., 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும்.

ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும் வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவுக் கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து