முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
SUN 2023-02-28

சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  இந்த நிலையில், கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

“பருவ காலங்களில் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்.  அந்த வகையில் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது அது நேரடியாக கண்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.  இதனை அலட்சியப்படுத்தும் போது பாதிப்பு தீவிரமடைந்து பார்வைத் திறன் குறைய நேரிடும்.  கடந்த சில வாரங்களாக உலர் விழி,  கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.

உலர் விழி பிரச்னை கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது  ஏற்படுகிறது.  இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம். இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது.

அசுத்தமான கைகளால் கண்களைத் தொடாமல் இருப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.  சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு பல வகையான கண் நோய்களை விளைவிக்கக் கூடும்.  இந்த கதிர்வீச்சு கண் புரை, விழிப்புள்ளிச் சிதைவு, ஃபோட்டோகரட்டாடிஸ் போன்றவற்றை ஏற்படும்.  இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம்.

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தைக் குறையாமல் வைத்திருக்கும் பானங்களை அருந்த வேண்டும்.  செயற்கை குளிர்பானங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து