முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
Rain-2023-11-30

Source: provided

சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ம் தேதி 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்தது. இதையடுத்து வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., வட தமிழக - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று (மே 23) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து