முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      தமிழகம்
Davidson-Devasirvadham 2025

Source: provided

சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்அப் மரணத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கிய உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:-

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம். மேலும், உண்மை அறியும் குழுவுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட கருத்து பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியாக எப்.ஐ.ஆர்., சி.எஸ்.ஆர். கொடுக்க வேண்டும். அதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. காவல் நிலையத்தில் இதற்காகவே தான் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கக் கூடாது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கவோ திருப்பி அனுப்பவோ கூடாது.

ஏதாவது பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை மொத்தமாக எடுக்கக்கூடாது. தேவை இல்லாமல் அதிகமான காவலர்கள் ஒரே இடத்தில் நியமிக்க கூடாது.  பாதுகாப்பு பணிகள் குறித்து சரியான மதிப்பீடு வேண்டும். அதை பொறுத்து தான் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை நியமிக்க வேண்டும். எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் ஸ்டேஷன்ல குறைந்தபட்சம் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். அதாவது சிறிய காவல்நிலையம் என்றால் 5 காவலர்களும், மீடியம் காவல்நிலையம் என்றால் 10 காவலர்களுக்கு குறையாமலும், பெரிய காவல்நிலையம் என்றால் 15 காவலர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். காவல்நிலையத்தில் பணியில் ஆள் இல்லாமல் இருக்க கூடாது.

சோசியல் மீடியாவில் காவல்துறைக்கோ அரசுக்கு எதிராகவோ, அரசின் திட்டங்களுக்கு எதிராகவோ, தவறான பதிவுகளை யாரும் பதிவு செய்திருப்பின் அப்பதிவின் மீது சரியான சட்ட கருத்துரை பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டோ அல்லது பைக் ஸ்டண்ட் செய்தோ ரீல்ஸ் போன்ற பதிவுகள் செய்யக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அப்படி பதிவு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்களில் சாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது, போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். போதை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

 முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். அதில் காவலர்கள், பெண் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

யாரையேனும் கைது செய்யும்போது பொதுமக்களுக்கு தெரியும் அளவிற்கு செய்யாமலும், அதன் முலம் ஏதாவது பிரச்சனை ஏற்படும் அளவிற்கு உள்ளதாகவும் இருக்கக் கூடாது. தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து கைது செய்ய வேண்டும். அதனை பிரபலப்படுத்தும் அளவிற்கு இருக்கக் கூடாது. அதன் முலம் ஏதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு பெண் காவலர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் வழங்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற பெண் காவலர்கள்களுக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணி மாறுதல் வழங்க வேண்டும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமுக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். அதிகப்படியான தடுப்புகாவல் சட்டத்தில் வைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிவதற்கு தகுந்த துணை காவல் கண்காணிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சரியாகப் பணி புரியாத துணை காவல் கண்காணிப்பாளர்களை பணி மாறுதல் செய்ய இருப்பின் அவர்களின் பட்டியல்களையும் தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக திருட்டு குற்றங்களில் கொள்ளை, கூட்டுக் கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும், உயர்நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் இதை பின்பற்றினால் மட்டுமே கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கட்டுப்படுத்த முடியும்.

காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.  விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. குற்றக்குழு & சிறப்புக்குழுவில் அனுபவம் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேவையில்லாத துன்புறுத்தல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத கஸ்டடி இருக்கக் கூடாது. திருட்டு வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முழுமையான பறிமுதல் என்ற பெயரில் விசாரணை கைதிகளை துன்புறுத்தல் கூடாது.

 விசாரணை முறை தொடர்பாக சரியான பயிற்சியை முன் அனுபவம் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்டு வழங்க வேண்டும். விசாரணையின் போது குற்றக்குழு & சிறப்புக்குழுவில் பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காவலரும் விசாரணை செய்யக்கூடாது.  ஒரே நபரை முன்று நான்கு நபர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்க கூடாது விசாரணை என்ற பெயரில் தேவையில்லாத துன்புறுத்தல்கள் கூடாது. எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

வாகன தணிக்கையின் போது கவனமாக செயல்பட வேண்டும் தேவையில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது. குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது. காவல் நிலையம் அல்லது பொது இடங்களில் யாரேனும் ஒருவரால் அசம்பாவிதங்கள் அல்லது தாக்குதல் நடைபெறும் போது அதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் போன்றவைகளின் புழக்கம் எந்த மாவட்டத்திலும் இருக்கக் கூடாது இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கடந்த ஆண்டைவிட அதிகமான சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  முக்கிய பெரிய பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு பதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

மாவட்ட கலெக்டர் மற்றும் நீதித்துறை உடன் இணக்கமாக இருக்க வேண்டும். மதம் மற்றும் சாதிய தொடர்பான பிரச்சனைகளுக்கு கடிதம் கொடுத்து மாவட்ட நிர்வாகம் முலம் சரியான தீர்வு காண வேண்டும்.  காவல்துறை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை வளர்க்கவும் மேம்படுத்தவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  கலப்புத் திருமணம், காதல் விவகாரங்கள் போன்றவைகளில் காவல்துறையினர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

சி.சி.டி.வி. கேமராக்கள் அதிக எண்ணிக்கையில் பொருத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 60 நாட்களுக்கு மேலாக உள்ள விசாரணை வழக்குகளை உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து