முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதா விலகல்

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      இந்தியா
Kavita 2024-08-27

Source: provided

ஹைதராபாத் : பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்து கவிதா நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக பி.ஆர்.எஸ். நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய நாட்களில் எம்எல்சி கவிதாவின் செயல்கள், அணுகுமுறை மற்றும் அவரது கட்சி விரோத நடவடிக்கைகளை பி.ஆர்.எஸ். உயர்மட்டக் குழு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. அவரது செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கட்சித் தலைமை உணர்ந்தது. இதனால் அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹைதாராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, கட்சிப் பொறுப்புகளை தான் ராஜினாமா செய்வதாகவும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய கவிதா, “கடந்த 2024, நவம்பர் 23-ம் தேதி சிறையில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட பிறகு, கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டேன். வட்டமேஜை மாநாடுகள், போராட்டங்கள், பெண்களுக்கான இடஒதுக்கீடு எழுத்துக்கள் என ஏராளமான பணிகளை மேற்கொண்டேன். இவை அனைத்தும் கட்சி விரோத நடவடிக்கைகளா?

எனது குடும்பத்தை சிதைக்க, பி.ஆர்.எஸ். கட்சியை கைப்பற்ற சதி நடக்கிறது. அதன் முதல் அத்தியாயமாகத்தான் என்னை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். எனது தந்தை கே.சந்திரசேகர ராவ் மற்றும் சகோதரர் கே.டி. ராமாராவ் ஆகியோருக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், நானும் எனது தந்தையும் எனது சகோதரரும் ஒன்றாக இருப்போம்.

எனது உறவினரும் கட்சியின் முக்கிய நபராக இருப்பவருமான முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ்தான் இவை அனைத்துக்கும் பின்னால் இருக்கிறார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது ஹரிஷ் ராவ், அவரிடம் சரணடைந்தார். அதன்பிறகுதான் இவை அனைத்தும் தொடங்கியது. இந்த சந்திப்புக்குப் பின் ஹரிஷ் ராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் கைவிட்டது. காலேஸ்வரம் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேட்டில் எனது தந்தைக்கு தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் கூறியபோது ஹரிஷ் ராவ் ஏன் அமைதியாக இருந்தார். நான் வேறு ஒரு கட்சியில் சேரப் போவதாகக் கூறப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன். எனது அரசியல் எதிர்காலம் குறித்து வரும் நாட்களில் முடிவுகளை எடுப்பேன். என தெரிவித்தார்.

கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் தெலங்கானாவில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால், தற்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது. காலேஷ்வரம் அணை, அப்போதைய ஆட்சியாளர்களால் கமிஷன் பெறப்பட்டு, தரமின்றி கட்டப்பட்டதாக காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியது. அதோடு, இது குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தது. இந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

சிபிஐ விசாரணை குறித்த மாநில அரசின் முடிவை அடுத்து, தனது தாய்மாமாவும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான ஹரிஷ் ராவ் மீது கவிதா குற்றம் சாட்டினார். “காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால், பி.ஆர்.எஸ். தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ஆகியோர்தான் பொறுப்பு. காலேஷ்வரம் அணை கட்டும்போது, தெலங்கானா மாநில நீர்வளத் துறை அமைச்சராக ஹரீஷ் ராவ் இருந்தார். இதில் சந்தோஷும் சம்பந்தப்பட்டுள்ளார். கேசிஆரின் கண்களை மறைத்து அவர்கள் பெரும் சொத்துக்களைக் குவித்தனர். அவர்கள் ஊழலின் அனகொண்டாக்கள்" என்று குற்றம் சாட்டினார். இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கவிதாவை கட்சி இடைநீக்கம் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து