கடலாடியில் சாலையே போடாமல் அரசு பணத்தை தி.மு.க.வினர் கொள்ளையடித்து விட்டனர்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      ஊழல்

 

கடலாடி,பிப்.19

சாலையே போடாமல் அரசு பணத்தை தி.மு.க.வினர் கொள்ளையடித்து விட்டனர் - ஆர்.பி. உதயகுமார்.

கடலாடி தாலுகாவில் சாலையே போடாமல் அரசு பணத்தை தி.மு.க. வினர் கொள்ளையடித்து விட்டனர் என்று முதுகுளத்தூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசினார். 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி மற்றும் பேருந்து வசதி ஆகியவற்றை நிறைவேற்றித் தராமல் முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், சாலை வசதி மற்றும் பேருந்து வசதியினை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், ராமநாதபுரம் மாவட்ட  அ.தி.மு.க.  சார்பில், 18.2.2011 வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதன்படி முதுகுளத்தூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தர்மர் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

தமிழ்நாடு அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரிக்கிறது. கடலாடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலசிறுபோது, சவேரியார் சமுத்திரம் சாலை, போடாமலேயே அரசின் பணத்தை கொள்ளையடித்து விட்டனர். இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். அரசின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு கருணாநிதியின் கஜானாவை நிரப்புகின்றனர். கருணாநிதி குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை கடத்தி செல்வதற்கு ரெடியாகி விட்டனர். தொகுதியில் எம்.எல்.ஏ. முருகவேல் ஒரு வியாபாரி. மக்களைப் பற்றி கருணாநிதி கவலைப்படுவதில்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. சாலையில் செல்லும் பள்ளி மாணவர் மாலையில் வீடு திரும்பினால்தான் உறுதி. இல்லையென்றால் யாரோ கடத்தியிருப்பார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு இணை செயலாளர் கர்ணன், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி பத்மநாபன், சாயல்குடி மூக்கையா, கமுதி மீனாட்சி சுந்தரம், நகராட்சி சேர்மன் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட பொருளாளர் மலைக்கண்ணன், வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் வக்கீல் கோபாலகிருஷ்ணன், முனியசாமி, குழந்தைவேலு, வக்கீல் ஜோதிமுருகன் மற்றும் அ.தி.மு.க, கம்யூ, ம.தி.மு.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: