முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டக் குழுவினர் உண்ணாவிரதம்: போலீசார் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை பிப்-21 - கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் நள்ளிரவு முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசின் சார்பில் 4 பேர் கொண்ட புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் போராட்ட குழுவினரின் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது போராட்டக்குழுவினரின் பிரதிநிதிகள் நிபுணர் குழுவிடம் போராட்டகுழுவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினருடன் மாநில நிபுணர்குழு கருத்துக்களை கேட்டறிய வேண்டும், அப்பகுதி கிராம மக்களை மாநில அரசின் நிபுணர் குழுவினர் நேரடியாக சந்தித்து பேசவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் நிபுணர் குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 

எந்த முன்னேற்றமும் இல்லாததால் கூடங்குளத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனவே அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ் நேற்று கூடங்குளத்திற்கு நேரில் 

சென்று பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினார். இதற்கிடையே அணுமின் நிலையத்தை போராட்டகாரர்கள் முற்றுகையிடலாம் என்ற தகவல் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளதால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போராட்டக்குழுவினர் நேற்று இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நள்ளிரவு முதல் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் கூடங்குளம் அணுஉலை விவகாரம் மீண்டும் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்