முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் காங்கிரஸ் 65 - மம்தா 229 இடங்களில் போட்டி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.23 - மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் நேற்று ஒரு முடிவுக்கு வந்தது. காங்கிரசுக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று ஒருவழியாக ஏற்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 229 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பிரதிநிதி ஷகீல் அகமது டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இங்கு தி.மு.க. காங்கிரஸ் இடையே சில ஆண்டுகளாக கூட்டணி நிலவுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு 90 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கோரியது. பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் 63 தொகுதிகளை கேட்டது காங்கிரஸ். ஆனால் 63 தொகுதிகளை கொடுக்க மனமில்லாத தி.மு.க, 60 தொகுதிகளைத்தான் கொடுக்க முடியும் என்று கூறியதோடு உறவை முறிப்பதாக தீர்மானமும் போட்டு நாடகம் நடத்தியது. இந்த நாடகம் 3 நாள் நீடித்தது. பிறகு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை அந்த கட்சிக்கு கொடுக்க தி.மு.க. ஒருவழியாக சம்மதித்தது. காங்கிரஸ் மேலிடத்தின் மிரட்டலுக்கு பணிந்தோ என்னவோ, அந்த கட்சி கேட்ட 63 தொகுதிகளை தி.மு.க. கொடுக்க முன்வந்தது. இது தமிழ்நாட்டில் நடந்த கதை. 

மேற்கு வங்கத்திலும் இதே போல் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்தது. இம்மாநிலத்தில் மொத்தம் 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் தங்களுக்கு 90 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் காங்கிரஸ் கோரியது. ஆனால் மம்தா பானர்ஜி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 45 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். தமிழ்நாட்டில் தி.மு.க.வை மிரட்டியது போல் தன்னை மிரட்ட முடியாது என்கிற பாணியில் அவர் பேசி வந்தார். அதன் பிறகும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த இழுபறிக்கு நேற்று ஒருவழியாக தீர்வு ஏற்பட்டு சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்கு பிறகு மம்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரணாப் முகர்ஜி பேசினார். இதைத் தொடர்ந்தே இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. இத்தகவலை டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பிரதிநிதி ஷகீல் அகமது நிருபர்களிடம் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், 

காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், இந்த கூட்டணி மூலம் இடதுசாரிகளின் மோசமான ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மேற்கு வங்க மக்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்தார். நேற்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி காங்கிரஸ் 65 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 229 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் ஷகீல் அகமது தெரிவித்தார். இந்த கூட்டணி மூலம் மேற்கு வங்கத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்