முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் திரிவேதி விவகாரம்: பாராளுமன்றத்தில் அமளி

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 16 - ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியைப் பற்றிய விவகாரத்தால் பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வேதுறை அமைச்சராக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். தங்களது கட்சியை கலந்தாலோசிக்காமல் தினேஷ் திரிவேதி தன்னிச்சையாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்திருந்தன. தங்களைக் கேட்காமல் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய தினேஷ் திரிவேதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரிவேதி ராஜினாமா செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. தினேஷ் திரிவேதி பதவி விலகாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே பாராளுமன்றம் நேற்று காலை கூடியதும், திரிவேதி விவகாரத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்பின. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு திரிவேதி விவகாரம் தொடர்பாக சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, தினேஷ் திரிவேதி இன்னமும் ரயில்வே துறை அமைச்சராக இருக்கிறாரா? அவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டிற்கு இன்னமும் உயிரோட்டம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சபையில் பலத்த அமளி ஏற்பட்டது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கூட்டணிக் கொள்கை இந்த அளவுக்கு மிக மோசமாக உள்ளது என்று வேறு சில எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். திரிவேதி தாக்கல் செய்த பட்ஜெட்டின் கதிதான் என்ன? இந்த பட்ஜெட் லோக்சபையின் சொத்து. இதில் இந்த அரசு என்னதான் செய்யப்போகிறது? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளுக்கு மத்திய நிதி அமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி உடனுக்குடன் பதிலளித்தார். இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. கூட்டணி அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே வந்துள்ளன என்றார். கூட்டணி அரசாங்கத்தில் இருந்து ஓடிப்போனவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். எத்தனை முறை அவர்கள் கூட்டணியை விட்டு ஓடி இருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். குறிப்பாக மற்றவர்களைக் காட்டிலும் இந்த சபையில் இருப்பவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மிக நன்றாகத் தெரியும் என்றும் முகர்ஜி கூறினார். பிரதமருக்கு மம்தா பேனர்ஜி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி அவர் கூறவில்லை. ஆனால் ஒரு தகவலை கூறியிருக்கிறார். அந்த தகவலைப் பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அந்த கடிதத்தில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை கூற மறுத்துவிட்டார். லோக்சபையில் இந்த விவகாரம் பரபரப்பாக கடும் அமளிக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சம்பந்தப்பட்ட தினேஷ் திரிவேதியும் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தார். பொதுவாக மூத்த அமைச்சர்கள்தான் முன்வரிசையில் அமர்வது வழக்கம். அந்த வரிசையில்தான் இவரும் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் ஒருபுறம், ஆளும் கட்சியினரின் எதிர்ப்புக்குரல்கள் இன்னொருபுறம் என்று லோக்சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இறுதியில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே குறுக்கிட்டுப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயா, திரிவேதியை ராஜினாமா செய்யும்படி தங்களது கட்சி ஒருபோதும் கோரவில்லை என்றார். இந்த விஷயம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மம்தா பேனர்ஜிக்கும் இடையே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்