முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெப்ஸியை உடைக்க விடமாட்டோம் இயக்குனர் அமீர் பேட்டி

புதன்கிழமை, 21 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச் .- 21 - எந்த சூழ்நிலையிலும் பெப்ஸி அமைப்பை உடைக்க விடமாட்டோம் என்று பெப்ஸி ஊதியக்குழு தலைவரும் திரைப்பட  இயக்குனருமான அமீர் கூறினார். கடந்த சில தினங்களாக பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று முன் தினம் நடந்த தாயரிப்பாளர்கள் கூட்டத்தில் பெப்ஸி அமைப்பை உடைத்து புதிய அமைப்பை உருவாக்கப்போவதாக தயாரிப்பாளர்கள் சிலர் கூறினார்கள். இதனால் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பெப்ஸி அமைப்பினர் நேற்று பெப்ஸி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது ஊதியக்குழு தலைவர் அமீர் கூறியதாவது:- பட தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் ஊதியம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இது அரசு தொழிலாளர் நல ஆலோசனையாளரால் பேசி முடிக்கப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முடிவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் தயாரிப்பாளர்கள் சிலர் ஒன்று கூடி பெப்ஸியை உடைக்கப்போவதாக கூறி உள்ளனர். அதிலும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோற்று போனவர்கள் அமைப்பை உடைக்கப்போகிறோம் என்று மீடியாக்களில் பேட்டிக் கொடுக்கிறார்கள். இது கண்டித்து தக்கது. இந்த அமைப்பிற்கும் அமீருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். நான் பெப்ஸியின் ஊதியக்குழு தலைவராக இருக்கிறேன். இவர்களுக்கு உரிய ஊதியத்தை பெற்று தருவது என்னோட கடமை அதை நிறைவேற்றியே தருவேன். பெப்ஸியை யாராலும் உடைக்க முடியாது அதன்பின்னாடி 23 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த பிரச்சனை குறித்து 23 ம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். அதே போல நிரந்திரமான முடிவு ஒன்றை எடுக்க தொழிலாளர் நல ஆணையம் வரும் 22ம் தேதி வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று கூறினார்.  பின்னர் இப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பெப்சியின் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச் செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்றைய முன்தினம் தயாரிப்பாளர் சங்கத்தால் பெப்ஸியையும், ஊதியப் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் அமீரையும் குற்றஞ்சாட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்க படப்பிடிப்பு என்பது நடைபெறவே இல்லை.  நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 34 படப்பிடிப்புகள் சிறப்பாக நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில், தயாரிப்பாளர் சங்கத்தால் நேற்றைய தினம் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நடந்த கலவரங்களை பார்க்கும்பொழுது, தயாரிப்பாளர்கள் சங்கம் படமெடுக்காதவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை ஊர்ஜீதம் செய்கிறது.  அதேபோல், 40  ஆண்டுகளுக்கும் மேலாக பராம்பரியம் பெற்று மூன்று முதல்வர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இந்த பெப்சியை புதிதாக வந்த ஞானவேல்ராஜா தனது சுய நலத்திற்காக பெப்சியை உடைத்து, புதியதொரு சங்கத்தை ஆரம்பித்து அதன்மூலம் அலக்ஸ்பாண்டின் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவேன் என்று சவால் விடுவதையும் அதற்கு உறுதுணையாக இருந்துவரும் கே.ஆர்.தியாகராஜனையும் பெப்சி கண்டிக்கிறது. மேலும் 15 சங்கங்கள் ஊதிய உயர்வு பேசிமுடிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர் நல ஆணையத்தையும், அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசையும் திடீரென உதறிவிடுவது தயாரிப்பாளர் சங்கத்தில் சில சுயநலவாதிகள் செய்யும் செயல்தான் என்பதையும், படமெடுத்துக் கொண்டிருக்கும் உண்மையான தயாரிப்பாளர்களுக்கு பெப்சி இதேபோல் என்றும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும், அவர்களுடன் தான் நாங்கள் என்றென்றும் இருப்போம் என்றும், பராம்பரியமுள்ள இந்த பெப்சியை உடைக்க யார் முயன்றாலும் எங்களது உயிரைக் கொடுத்து காப்போம் என்றும் உறுதியளிக்கிறோம். 

இவ்வாறு பெப்சி நிர்வாகிகளின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்