முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரம்ப சுகாதார மையங்கள் தரம் உயர்வு: முதலமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.26 - கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.19.44 கோடி செலவில் 42 ஆரம்ப சுகாதார மையங்களை தாய் சேய் நலமையங்களாக தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மக்கள் நல்வாழ்வு என்பது சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.   ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கப்ர்வமான பங்கினை அளிக்க இயலும். இந்த வகையில் மக்கள் நல்வாழ்வுக்காக தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில், எந்த நேரமும் அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் இதர பிரசவ சேவை மற்றும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில், ஒரு சுகாதார மாவட்டத்திற்கு 1 என்ற அடிப்படையில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அத்தகைய தாய்​சேய் நல மையங்களாக  மேம்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த மையங்கள் கர்ப்பகால முன், பின் பராமரிப்பு, அவசர கால பிரசவ சேவை, பாதுகாப்பான கரு கலைப்பு, அறுவை சிகிச்சை சேவைகள் போன்ற பேறு சார் குழந்தைகள் நல சேவையினை வழங்கும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக செயல்படும். இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் பணியாற்றுவதற்கு கூடுதலாக ஒரு மருத்துவ அதிகாரி மற்றும் ஒரு செவிலியர் பதவிகள் தோற்றுவிக்கப்படும். மேலும், தொலை தூரத்தில் எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல் நிலை தாய்​சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும்.  இங்கு முழு நேர சேவை கிடைக்க வகை செய்யும் வகையில் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதலாக 2 செவிலியர் பதவியும் மற்றும் 1 சுகாதார பணியாளர் பதவியும்  தோற்றுவிக்கப்படும். இந்த புதிய திட்டங்களுக்காக அரசுக்கு 19.44 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்