முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திரத்திருவிழா: ஊட்டியில் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஏப்.- 6 - பங்குனி உத்திரத்திருவிழாயொட்டி ஊட்டியில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று பங்குனி உத்திரம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோயில், மிஷினரி ஹில் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  அதேபோல் ஊட்டி எல்க்ஹில் மலைமீது அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஊட்டியிலுள்ள சோழிய வேளாளர் இளைஞர் சங்கத்தினர் எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு பால்குடம் மற்றும் காவடிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கி காவடி ஊர்வலம் மார்க்கெட், மணிகூண்டு, ஏ.டி.சி.,பாம்பே கேசில் வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்ற பால் மற்றும் காவடிகளில் கொண்டு செல்லப்பட்ட இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சோழிய வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.பங்குனித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பிற்பகல் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலிருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி திருவீதி உலா புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்