முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணை சோதனை...!

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப்.26 - இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்தியா ஏற்கனவே பல்வேறு பெயர்களில் ஏவுகணைகளை தயாரித்து அவற்றை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்துள்ளது. சமீபத்தில் அக்னி 5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாக்கும், தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் ஏவுகணையை சோதித்து வெற்றிகண்டது. இந்த ஏவுகணை 1000 கிலோ அணு ஆயுதங்களுடன் 5000 கி.மீ. தொலைவு பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது. இப்போது இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஷகீன் 1 ஏ என்ற அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் இந்த ஏவுகணை எந்த இடத்தில் சோதித்துப் பார்க்கப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் வெளியிடவில்லை. இந்த அணு ஆயுத ஏவுகணை இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரத்தையும் தாக்கக்கூடியது என்றும் இது 2500 கி.மீ. முதல் 3000 கி.மீ. வரை செல்லக்கூடிய நடுத்தரரக ஏவுகணை என்றும் அந்த ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏவுகணை சோதனைகள் குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே ஒரு உடன்பாடு உள்ளது. அதன்படி இவ்விரு நாடுகளும் ஏவுகணை சோதனை நடத்தும்போது அதை பரஸ்பரம் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த உடன்பாடு. 

இந்த ஏவுகணை சோதனை குறித்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 3 முறை போர் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்