முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னதான திட்டம் மேலும் 50 கோவில்களில் விஸ்தரிப்பு

புதன்கிழமை, 9 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, மே.9 - 468 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் அன்னதானத் திட்டத்தை இந்த ஆண்டில் மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தவும், அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் சமையற் கூடங்களை நவீனப்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை (2012-13) அமைச்சர் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் மற்றும் பழனி திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை) அளிக்கவும், திருக்கோவில்களுக்கு வருகை தரும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் நலன் கருதி செய்து வரும் திட்டங்களோடு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் இதுபோன்ற பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பிவட ஊர்தி வசதி செய்யவும்,

தமிழர்களின் பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்பு மற்றும் நீதிநெறிக் கருத்துக்களை குழந்தைகளின் மனதில் ஆழப்பதித்திட முக்கியத் திருக்கோவில்களில் சனிக்கிழமை தோறும் ஆன்மீக நீதிநெறி வகுப்புகளை நடத்தவும், இந்த ஆன்மீக நீதிநெறி வகுப்புகளின் போது சிற்றுண்டி அளித்து சிறந்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் அளிக்கவும் இதுபோன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் அம்மா ஆணையிட்டுள்ளார். 

இந்து சமய அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களில் இருந்து உத்தேசமாக ரூ.65.41 கோடி ஆண்டு வருவாய் பெறப்படுகிறது.

ரூ.150 லட்சம் குத்தகை நிலுவை வசூல்

2011-2012 -ம் நிதியாண்டில் வருவாய் நீதிமன்றங்களில் நிலுவையிலிருந்த 11,644 வழக்குகளில் 891 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ.148.62 லட்சம் குத்தகை நிலுவைத் தொகை வசூலிக்க உத்தரவிடப்பட்டது. குத்தகை நிலுவையை முழுமையாக வசூலித்திட தேவையான நடவடிக்கைகள் முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

107 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 468.87 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் தனியார் பெயரில் தவறாக பட்டமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் பெயரில் மீண்டும் பட்டாமாற்றம் செய்ய ஆணை பெறப்பட்டது.

2011-2012-ம் நிதியாண்டில் 8 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 167.48 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய பதிவுகள் தனியார் பெயரில் இருந்ததை மாற்றம் செய்து திருக்கோயில் பெயரில் பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிறுவனங்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 119.71 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 17 கிரவுண்ட் 474 சதுர அடிப்பரப்புள்ள மனைகளும், 12 கிரவுண்ட் 333 சதுர அடி பரப்புள்ள கட்டிடங்களும் திருக்கோயில் வசம் சுவாதீனும் பெறப்பட்டுள்ளன.

2011-2012-ம் நிதியாண்டில் பல்வேறு இடங்களில் 855 ஆக்கிரமிப்பாளர்கள் 15.92 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை வாடகைதாரராக வரன்முறை செய்யப்பட்டது. அவர்களது குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி, மின் வசதி போன்ற வற்றிற்குத் தடையின்மைச் சான்றுகள் வழங்கப்பட்டன.

பக்தர்களின் வருகையையும், தேவையையும் கருத்திற்கொண்டு இத்திட்டத்தை மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்த தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். விரைவில் இத்திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்புகள், நீதிநெறி கருத்துக்களை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனதில் ஆழப்படுத்தி, சனிக்கிழமைதோறும் ஆன்மீக, நீதிநெறி வகுப்புகளை  தெரிவு செய்யப்பட்ட  திருக்கோயில்களில் நடத்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த வகுப்புகளின் போது சிற்றுண்டி வழங்கி சிறந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் அளிக்கப்படும்.

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு மட்டுமின்றி யானைப் பாகர்களுக்கும் அவர்களது உடல்நலம் பேணவும், யானைகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து அறியவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமிற்கு ரூ.45 லட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட ஏழை எளியோருக்கு திருமணம் திட்டத்தை தமிழக முதல்வரின் ஆணையின்படி சிறப்புடன் செயல் படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு இவ்வாண்டு ஒரு இணைக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம் மற்றும் ரூ.10 ஆயிரம் செலவில் சீர்வரிசைப் பொருட்கள் என்ற திட்டத்தில் 1006 இணைகளுக்கு திருமணம் சீரும் சிறப்புடன் நடத்தப்பட உள்ளது.

பழனி திருக்கோயிலுக்கு மேலும் ஒரு கம்பி வட ஊர்தியும், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலுக்கு புதியதாக ஒரு கம்பி வட ஊர்தியும் அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பழனியில் அமைக்கப்பட உள்ள கம்பி வட ஊர்தியை சர்வதேசத் தரத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வர் சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவாணைக் காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சுவாமி திருக்கோயில்,

இறை நம்பிக்கை, ஆன்மிகம் மற்றும் சமய ஈடுபாடு கொண்டோர், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் மனமுவந்து அளிக்கும் நன்கொடையைக் கொண்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன.

2011-12-ம் நிதியாண்டில் 319  திருப்பணிகள் ரூ.13.49 கோடி மதிப்பீட்டில் நன்கொடை மூலம் திருப்பணி செய்ய இசைவளிக்கப்பட்டது.

உபரி நிதியுள்ள திருக்கோயில்களின் திருப்பணி அவைகளின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

2011-12-ம் நிதியாண்டில் 152 திருக்கோயில்களுக்கு திருப்பணிகளுக்கு ரூ.30.82 கோடி திருக்கோயில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2011-12-ம் நிதியாண்டில் 51 திருக்கோயில்கள் சீரமைப்புப் பணிக்கு ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டது.

2011-12-ம் நிதியாண்டில் 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட உள்ளது. இப்பணியை ஆண்டுதோறும் முனைப்புடன் செயல் படுத்ததனி கவனம் செலுத்தப்படுகிறது.

திருக்கோவில்களில் நாதசுரம், தவில், தாள இசைவாணர்களை நியமனம் செய்து அவர்களுக்கு முறையே ரூ.1 ஆயிரத்து 500, ரூ.1000 மற்றும் ரூ.150 வீதம் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்திற்கென ரூ.1 கோடி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் அவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

திருக்கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60-வது நிறைவடைந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், ஓதுவார்கள், வேதபாராயணர்கள்,  அரையர்கள், திவ்விய பிரபந்தகம் பாடுவோர், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு அரசு நிதியில் இருந்து இத்துறை மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.750 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 

ரூ.750 மாத ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.14.49 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 483 பணியாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். கிராமப்புற பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு ரூ.750 வீதம் 2 ஆயிரத்து 353 கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும்  1006 திருக்கோவில்களுக்கு செய்யவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்