முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு: முதல்வர் கடும் கண்டனம்

புதன்கிழமை, 23 மே 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.24 - பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். புதன்கிழமை அன்று டெல்லியில் கூடிய ஆலோசனை கூட்டத்தில் பெட்ரோல் விலையை உயர்த்துவது என்று முடிவு செய்தது. இந்த விலை உயர்வு குறித்து உடனடியாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்துவது என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்ததிற்கு ஏற்ப இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதலே உடனடியாக அமலுக்கு வந்தது.

கடந்த 2010-ம் ஆண்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் விலை நிர்ணயத்தை பெட்ரோல் விநியோக நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததிலிருந்து பலமுறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றான்டு ஆட்சிக்காலம் நேற்று நிறைவுற்றது. இதையொட்டி, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கூட்டணி கட்சிகளுக்கு விருந்தளித்தார். அவர்களை குஷிப்படுத்திய பிரமதர் மன்மோகன்சிங் மக்களின் தலைமீது இடியை இறக்கும் வகையில் மூன்றாண்டு முடிந்து முதல்நாளே பெட்ரோல் விலையை உயர்த்தி தலையில் அதிக சுமையை வைத்துள்ளது அனைவரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததை அடுத்து இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் உருவாக்கி உள்ளன. இதை அறிந்த உடனேயே முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நேற்று காலையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசியபோது, ``மத்தியில் ஒரு அரசு இருக்கிறதா? செயல்படுகிறதா? என்று சாதாரண மனிதன்கூட கேட்கும் நிலை உள்ளது'' என்று விமர்சித்து இருந்தார். மாலையில் முதல்வர் ஜெயலலிதா வார்த்தைக்கு மத்திய அரசு செயல்வடிவம் கொடுத்து ``நானும் இருக்கிறேன்'' என்று காட்டுவது போல பொதுமக்கள் மத்தியில் கடும் சுமையை ஏற்றியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக்  கொள்கை தான் காரணம் ஆகும்.  இந்த நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கு மேலும் வித்திடும் வகையில் பெட்ரோல் விலையை இன்று (நேற்று) நள்ளிரவு முதல் லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று வரலாறு காணாத அளவில் விலையை உயர்த்தி மக்களை வஞ்சித்து இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி  அரசின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி  அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும்.  பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவுக்கு உயர்த்தியது  ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தாங்கொணா சுமையை சுமத்தி மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.  மூன்றாண்டுகள் நிறைவு செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூன்றாண்டுகள் நிறைவு அடைந்ததற்கு மக்களுக்கு அளிக்கும் பரிசாக இத்தகைய ஒரு விலை உயர்வினை அறிவித்துள்ளது.  இது கடும் கண்டனத்திற்குரியது ஆகும்.  பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்தும் போது எல்லாம்,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற எடுபடாத வாதங்களை மத்திய அரசு எடுத்து வைத்து விலை ஏற்றத்தை நியாயப்படுத்துவதை  எவராலும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.  நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவை வெளி நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்வதன் மூலம் பெறப்படுவதில்லை. உள்நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தச் சூழ்நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச சந்தை விலையை அடிப்படையாகக் கொள்வது நியாயமற்ற செயல்.  
இதே போன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அதன் காரணமாக பெட்ரோல் விலையை ஏற்றுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.  மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும்.  ஏற்கெனவே வங்கிக் கடன்கள் மூலம் வாகனங்களை வாங்கியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவர்.  பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் வாகன உரிமையாளர்கள் வாடகையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்.  இதன் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியும், பொருளாதார நிலையும் மேலும் வீழ்ச்சி அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  மேலும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் அதிக அளவில் லாபம் ஈட்டி, மத்திய அரசு உட்பட அதன் பங்குதாரர்களுக்கு அதிக அளவு ஈவுத் தொகையினை அளித்து வருகின்றது.  எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகளை குறைப்பதன் மூலமும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதன்  மூலமும் பெட்ரோல் விலை உயர்வை நிச்சயம் தவிர்க்கலாம்.  
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல் ஆண்டுக்கு பல முறை பெட்ரோலின் விலையினை உயர்த்துவது என்பது மக்களை அல்லல்படுத்தும் செயலாகும்.  எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இல்லையெனில் மக்கள் விடும் கண்ணீர் மத்தியில் ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடைய செய்யும் ஆயுதமாக மாறி விடும் என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.  
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்