முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - முதல்வர் ஜெயலலிதா 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (14.6.2012) தலைமைச் செயலகத்தில், 2011​-2012ஆம்  கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12​ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.

 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, மாணவ சமுதாயத்தின் நலனிற்காகவும், கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையிலும், கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேருந்து பயணஅட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினிகள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், ஆன்​லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

2011​-2012 ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12​ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ். சுஷ்மிதா​க்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களைப்  பெற்ற மாணவி டி. கார்த்திகா, மாணவர்கள் பி. அசோக் குமார், சி. மணிகண்டன் ஆகிய மூன்று மாணவ, மாணவிகளுக்கு  தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற பி. மகேஸ்வரி, எஸ். பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 6 மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார். மேலும், 10​ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பி. ஸ்ரீநாத்​க்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களை பெற்ற மாணவிகள் இ.எம். நந்தினி, கே.என். மகாலஷ்மி, ஸ்வாதி சென்னியப்பன்,   என். அகிலா,   மாணவர்கள்    எஸ். ஜென்கின்ஸ் காட்பிரே, டி. கவின்,    ஆகிய    ஆறு    மாணவ, மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள் எஸ். ஸ்மிதா, கே. சூர்யா, ஆர். தாரணி, டி. வினுமிதா, கே. ஷர்மிளா, பி.கே. nullஜாஸ்ரீ, பி. அம்ரிதா, ராஜேஸ்வரி, மாணவர்கள் எஸ்.கே. அபிஷேக், எம். ஸ்ரீதரா, ஐ. ஜஸ்டின் சேவியர் ஆகிய பதினொரு மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 18 மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டியதுடன், பரிசுப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாநில அளவில் 10 மற்றும் 12​ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கியதோடு,  கல்வியில் சிறந்து விளங்கி, விடாமுயற்சியுடன் தங்கள் லட்சியத்தை எய்தி, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்று வாழ்த்தினார்.

மேலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாநில அளவில் பரிசுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஊட்டி, பொதுத் தேர்வுகளில்  அதிக மதிப்பெண்களைப் பெற வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரொக்கப் பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளும்,  பெற்றோர்களும் ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்துப் பாராட்டி, வாழ்த்திய தமிழக முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்  தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்