முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சதானந்த கவுடாவிற்கு அதிருப்தியாளர்கள் கெடு

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூரு, ஜுன் - 20 - கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை 3 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சதானந்த கவுடாவிற்கு எடியூரப்பா ஆதரவாளர்கள் கெடு விதித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சதானந்த கவுடா முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஆனால் இப்போது சதானந்த கவுடாவிற்கு எதிராக எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சதானந்த கவுடாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதற்கு சதானந்த கவுடா செவிசாய்க்கவில்லை. இதையடுத்து எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும், எடியூரப்பாவின் ஆதரவாளருமான சி.எம்.உதாசி கூறுகையில், தனது இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் 40 எம்.எல்.ஏ.க்களும் 7 எம்.எல்.சி.க்களும், 3 எம்.பி.க்களும் கலந்து கொண்டதாக தெரிவித்தார். சதானந்த கவுடாவிற்கு பதிலாக எடியூரப்பாவோ அல்லது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாரோ முதல்வராக வரவேண்டும் என்று உதாசி தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் ஷெட்டார் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடகத்தில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க.விற்கு 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 75 உறுப்பினர்கள் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் என்றும் அவர் கூறினார். எனவே யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்னும் 3 நாட்களுக்குள் சதானந்த கவுடா கூட்ட வேண்டும் என்று கெடு விதித்துள்ளதாக உதாசி மேலும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்