முக்கிய செய்திகள்

சத்யமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம்

raj5 0

சென்னை, ஏப்.1 - தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏராளமான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆரம்பரம் முதல் தள்ளாடி வருகிறது. தேர்தல் பிரச்சாரம் பாதியளவு சென்ற பிறகும் கோஷ்டி சண்டை குத்து வெட்டுக்களால் பாதி இடங்களில் காங்கிரஸ் பிரச்சாரத்தை கூட ஆரம்பிக்கவில்லை.

63 இடங்களை தி.மு.க. விடம் காங்கிரஸ் போராடி பெற்றது. இதனால் தி.மு.க. வெறும் 119 இடங்களில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பா.ம.க.வை எப்படி தி.மு.க.வில் சேர்க்கலாம் என்று காங்கிரஸ் சண்டை போட்டது.

இதன் பின்பு காங்கிரஸ் விருப்பமனு பெற்று டெல்லி சென்று வேட்பாளர் இறுதி பட்டியலை சோனியாவிடம் காட்டி இறுதிபடுத்தினார். ஆனால் அந்த குழுவில் வாசன், சிதம்பரத்திற்கு இடம் இல்லாததால் மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், ஜி.கே.வாசன், பா.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் சோனியாவிடம் நேரடியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் 63 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெரும்பாலும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் இடம் பெற்றனர்.

ஜீ.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு அடுத்து தங்கபாலுவின் ஆட்கள் அதிகம் இருந்தனர். அதில் பலருக்கும் காங்கிரசுக்கு சம்பந்தமே இல்லை என்று கூறப்பட்டது. மேலும் தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் வேட்பாளர் சீட்டு கிடைத்தது காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். மோதல்கள், கொடும்பாவி எரிப்பு, போராட்டம், மறியல் என்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் தங்கபாலுவுக்கு எதிராக போராடினர். சிதம்பரமும், வாசனும் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் மேலுக்கு வேலை  செய்தனர்.

ஜெயந்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரை எதிர்த்து சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார்.

தமிழகம் முழுவதும் வேட்பாளர் குளறுபடிக்கு தங்கபாலுவே காரணம் என்று கூறி தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கேட்டு நேற்று சத்தியமூர்த்தி பவனில் எஸ்.எம்.இதயதுல்லா, மயிலை பெரியசாமி, அமெரிக்க நாராயணன் ரஞ்சித்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது. 12 மணி அளவில் ஏராளமான தொண்டர்கள் பாதுகாப்புடன் சத்யமூர்த்தி பவனுக்கு தங்கபாலு வந்தார். உண்ணாவிரதம் இருந்தவர்களை உள்ளே வந்து பேச்சுவார்ததை நடத்த வரும்படி கேட்டார். அவர்கள் மறுக்கவே உள்ளே சென்ற தங்கபாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது உண்ணாவிரதம் போராட்டம் சட்ட விரோதமானது. கட்சிக்கு எதிரானது. 63 வேட்பாளர்கள் தலைமையின் முடிவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தேர்தல் முடியும் வரை ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதன்பிறகு புகார் அளித்து சோனியா காந்தி என்ன முடிவு எடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன் வேட்பாளர் ஆவது நான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

அதன்பின் தங்கபாலுவுடன் வந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பவர்கள் எதிரிலேயே பிரியாணி பொட்டலம் வரவழைத்து பரிமாறினார் தங்கபாலு.

இதன் பிறகு உண்ணாவிரதம் இருந்த எஸ்.எம்.இதயதுல்லா பேசியதாவது:​-

தி.மு.க.விடம் போராடி பெற்ற 63 தொகுதிகளிலும் தங்கபாலு குளறுபடி செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் வேட்பாளர் பிரச்சினை. இராமநாதபுரத்தில் இராஜபக்ஷேவின் நண்பரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இதன் மூலம் மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் தங்கபாலு இழைத்துள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உண்ணாவிரதம் இருந்த இதயதுல்லா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: