முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சாநெஞ்சன் அழகிரி அஞ்சுவது ஏன் ? விஜயகாந்த் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஒட்டன்சத்திரம், ஏப்.3 - அஞ்சாநெஞ்சன் என்று  கூறிக்கொள்ளும் அழகிரி தனது வீட்டு பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்காக அஞ்சுவது ஏன் என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் அ.தி.மு.க. - தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒட்டன்சத்திரத்தில் பேருந்து நிலையம் எதிரே அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்து பேசினார். கூட்டத்தில்  அவர் பேசியதாவது

கருணாநிதி அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காக தனது குடும்ப தொலைக்காட்சியில் பலவித செய்திகளை போட்டு மக்களைக் குழப்பி வருகிறார். இதைப் பார்த்து பொதுமக்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் தேர்தல் வரை அவர்கள் குடும்பத் தொலைக்காட்சியைப் பார்க்கவே வேண்டும். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதில் போட்டி இருப்பதாகக் கூறி பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். இது நாட்டிற்கே தெரியும். இந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக அமர்வார். இதில் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எங்களது ஒரே குறிக்கோள் அராஜக தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது ஒன்று தான் குறிக்கோள்.

அஞ்சாநெஞ்சன் என்றுகூறிக்கொள்ளும் அழகிரி தனது வீட்டு பாதுகாப்பை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றதற்காக அஞ்சுவது ஏன்? நாங்களெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது படை பரிவாரங்களோடு தான் போகிறோமோ? தனி ஆளாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறோம். பிறகு அழகிரிக்கு எதற்கு அஞ்சாநெஞ்சன் பட்டம்? என்று பேசியபோது கூட்டத்தில் இருந்தோர் கைதட்டி ரசித்து கேட்டனர்.

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாலசுப்பிரமணியம் வெற்றி பெற்றால் இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாளைய கோரிக்கையான கண்வலிக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்படும். குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். இதுவரை 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. உறுப்பினர் செய்யாத அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றப் பாடுபடுவார் என்று பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தோழமைக்கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony