முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தொடர்ந்து கவலைக்கிடம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான விலாஷ்ராவ் தேஷ்முக் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. .

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, கல்லீரலிலும் கோளாறு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மும்பை பிரிஜ்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவ் தேஷ்முக் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கடந்த திங்கள்கிழமையன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று  அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. .குளோபல்  மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் புகழ் பெற்றது இந்த மருத்துவமனை. இரண்டாவது மாடியில் தனி அறையில் வைத்து அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு கல்லீரல் மட்டுமின்றி இரண்டு கிட்னிகளும் முழுமையாக செயல் இழந்து விட்டன. பிற உறுப்புகளும் செயல் இழந்து வருகின்றன.   அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.   விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அவரது மகனும், இந்தி நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக் கல்லீரல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவில் இப்போது அவரது உடல்நிலை இல்லை. உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியும். இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் தற்போதைக்கு ஒத்திப்போட்டுள்ளனர். இங்குள்ள டாக்டர்கள் குழுவினர் தவிர, மும்பையில் இருந்து வந்துள்ள டாக்டர்களும், தேஷ்முக்கின் உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். 

தேஷ்முக்கின் குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே முகாமிட்டுள்ளனர். மனைவி வைஷாலி, மகன் ரித்தீஷ், மருமகள் ஜெனிலியா மற்றும் உறவினர்கள் இங்குதான் உள்ளனர். அவர்களிடம் தேஷ்முக்கின் உடல்நிலை குறித்து கேட்டபோது, அவர்கள் வாய் திறக்க மறுத்து விட்டனர். மிகவும் வற்புறுத்தி கேட்டபோது, நேற்றைக்கு (முன்தினம்), இன்று (நேற்று) பரவாயில்லை என்று மட்டுமே கூறினர். தேஷ்முக் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தபோது, அமைச்சரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே அமைச்சரின்   உடல்நிலை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க இயலாது என்று கூறி விட்டனர்.   நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலையில் இப்போது லேசாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மும்பையில் இருந்ததைவிட தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ் மட்டம்வர் சென்னையில் தெரிவித்தார். அவருடைய உடல்நிலைமை சீரடைந்ததும் அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

உலகப் புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் முகமது ரீலா  அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. விலாஸ்ராவ் தேஷ்முக் உடல்நிலையை தெரிந்துகொள்வதற்காக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வந்துள்ளனர். . இதேபோல மகாராஷ்டிரா முதல்வர் ப்ருத்விராஜ் சவான் மற்றும்  துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சென்னை விரைந்துள்ளார். தேஷ்முக்கின் மனைவி, மகன் ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே தேஷ்முக் விரைவில் குணமடையவேண்டி, அவரது சொந்த ஊரான லத்தூர் நகரில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்