முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. பொதுகணக்கு குழு முன்பு விசாரணைக்கு நீரா ராடியா ஆஜர்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 5 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன்பு விசாரணைக்காக நீரா ராடியா நேற்று ஆஜரானார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களுடன் பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா தொலைபேசியில் பேசியுள்ளார். அது குறித்து அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையின்போது பல முக்கிய பிரமுகர்களுடன் தொலைபேசியில் பேசியதை நீரா ராடியா ஒப்புக்கொண்டார். மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் தாம் கமிஷன் பெற்றதையும் நீரா ராடியா ஒப்புக்கொண்டுள்ளார். நீரா ராடியாவின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களை சி.பி.ஐ. சோதனை செய்தபோதிலும் அவரை சி.பி.ஐ. கைது செய்யவில்லை.

இந்தநிலையில் நீரா ராடியாவிடம் பாராளுமன்ற பொது கணக்குக்குழு விசாரணை நடத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று அவரை அழைத்து விசாரித்தது. விசாரணையின்போது பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரணை பாராளுமன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் தொலைபேசியில் பேசியது குறித்தும் மத்தியில் இரண்டாவது முறையாக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து தமது செல்வாக்கை பயன்படுத்தியது குறித்தும் நீரா ராடியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆ.ராசாவுக்கு தொலைதூர தொடர்புத்துறை கிடைக்க நீரா ராடியா பல்வேறு வழிகளில் முயற்சி செய்தது குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது. ராசா தற்போது, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைஷ்ணவி கார்பரேட் தகவல்தொடர்பு கம்பெனியின் தலைவராக நிரா ராடியா இருக்கிறார். பாராளுமன்ற பொது கணக்குக்குழு தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்